சென்னை: சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதற்காக கைது செய்யப்பட்ட யூடியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூலை 29ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
பெண் காவலர்கள் மற்றும் பெண் காவல்துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதற்காக யூடியூப் சேனல் சிஇஓ பெலிக்ஸ் ஜெரால்டையும் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி பெலிக்ஸ் ஜெரால்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி டி.வி., தமிழ்ச்செல்வி முன்னிலையில் இன்று நடந்தது. பெலிக்ஸ் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜான் சத்யன், ”மனுதாரர் நூறு நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதால், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், ஜாமீன் வழங்க வேண்டும்.
அவருக்கு ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல் செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் கோரினார். இதையடுத்து, விசாரணையை ஜூலை 29ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.