விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவில் உள்ளது. சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த புகழ்பெற்ற கோவிலை அடர்ந்த காடுகளின் வழியாக கரடுமுரடான மலைப்பாதையில் 10 கிலோமீட்டர் நடந்துதான் அடைய வேண்டும். ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் சந்தன மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில், பிரதோஷம் மற்றும் கார்த்திகை அமாவாசையையொட்டி 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி அம்மனை தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும், இரவில் கோயிலில் பக்தர்கள் தங்க அனுமதிக்கப்படவில்லை.

மேலும் நீர்நிலைகளில் பக்தர்கள் நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராத மழை பெய்தால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி அம்மனை தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.