சென்னை: அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை அரசு மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று மாலை 6 மணி அளவில் தொடங்கியுள்ளனர். அவர்களின் போராட்டம் இன்று மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் சுமார் 400 தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் 1,200 மருத்துவர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்த விவரம் ஆஸ்பத்திரி முன்பு உள்ள போர்டில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதே சமயம் அவசர சிகிச்சை பிரிவு வழக்கம் போல் செயல்பட்டது.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் பழைய டீன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க நிர்வாகி செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரி முன்பு அரசு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அரசு மருத்துவமனை சங்கத்தின் மாவட்ட தலைவர் டாக்டர் அருள் தலைமையில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் நடக்கும் இந்த போராட்டத்தால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.