திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அண்ணாதுரையின் மகள் ரிதன்யா, தனது திருமணத்துக்கு வெறும் 78 நாட்களுக்குப் பிறகு தற்கொலை செய்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. ரிதன்யாவுக்கு, திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணனின் பேரன் கவின் குமாருடன் பிரம்மாண்டமான திருமணம் நடந்தது. அந்த திருமணத்தில் 300 சவரன் நகை, வால்வோ கார், மற்றும் பல்லாயிரம் மதிப்புள்ள பொருட்கள் வரதட்சணையாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், திருமணத்தின் போது 500 சவரன் நகை வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டதும், பின்னர் அந்த வாக்குறுதி நிரூபணமாக மாறவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருமணத்திற்கு பின்னர், கவின் குமார் மற்றும் அவரது பெற்றோர் – மாமியார், மாமனார் ஆகியோர், ரிதன்யாவை வரதட்சணை கேட்டு மனதளவிலும் உடலளவிலும் துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. ரிதன்யா தனது பெற்றோரிடம் இந்த துன்பங்களை தெரிவித்து இருந்ததாகவும், அவர்களால் சமாதானமாக அனுப்பிவைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. துன்பங்களை தாங்க முடியாமல், கடந்த ஜூன் 28 ஆம் தேதி, அவிநாசி அருகே சாலையோரத்தில் காரை நிறுத்தி, பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி, ரிதன்யா தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்னதாக, தனது பெற்றோருக்கு வாட்ஸ் அப் மூலம் மனம் உருக்கும் ஆடியோவொன்றையும் அனுப்பியுள்ளார்.
அந்த ஆடியோவில், “இந்த வாழ்க்கையை விட வேறு வாழ்க்கையை தேர்வு செய்ய முடியாது… என்னை மன்னித்து விடுங்க அப்பா…” எனக் கூறியிருந்தார். இது கேட்போரின் கண்களுக்குத் தண்ணீர் வர வைக்கும் அளவுக்கு வேதனையை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவின் அடிப்படையில், காவல்துறை கவின் குமார் மற்றும் அவரது பெற்றோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், தங்களது மீது தொடரப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி கவின் குடும்பத்தினர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதற்கெதிராக, ரிதன்யாவின் தந்தை இடையீட்டு மனுவும் தாக்கல் செய்துள்ளார்.
கேஸ் குறித்த விசாரணை தொடரும் வேளையில், தற்போது வெளியாகியுள்ள காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில், ரிதன்யா இறப்பிற்கு காரணமானவர்கள் கவின் குமார், அவரது மாமனார் மற்றும் மாமியார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், “வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு கொடுமைகள் நடந்துள்ளன” என்ற அதிர்ச்சிகரமான தகவலும் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம், சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பும், வரதட்சணைக் கலாசாரத்தின் ஆபத்துகளும் மீண்டும் ஒரு முறை வெளிச்சமிட்டு நிற்கிறது.