தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே புதிய மேட்டு கட்டளை வாய்க்காலுக்கு தண்ணீர் விட வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுகா, செங்கிப்பட்டி பகுதியைச் சேர்ந்த புதிய மேட்டு கட்டளை வாய்க்கால் மற்றும் உய்யக்குண்டான் பகுதி பாசன விவசாயிகள், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜத்திடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
“எங்கள் பகுதியில் சுமார் 20, 000 ஏக்கருக்கு மேல் விவசாயப் பகுதியாகும். கரூர்- மாயனூர் பகுதியில் இருந்து தண்ணீர் திறந்து சுமார் 60 நாட்களுக்கு மேல் ஆகியும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் பாசனப்பகுதிக்கு தண்ணீர் இன்னும் வந்து சேரவில்லை.
எங்கள் கோரிக்கையை மாவட்ட ஆட்சியர், பாராளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் நீர்வளத்துறை (ஆற்றுப் பாதுகாப்பு கோட்டம் திருச்சி) ஆகியோர்களை மூன்று முறை சந்தித்து கோரிக்கை வைத்தும், இன்னும் எங்கள் பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. கடந்த ஆண்டும் எங்கள் பகுதிக்கு தண்ணீர் வராமல் விவசாயம் பொய்த்துப் போனது.
இந்த ஆண்டு தண்ணீர் இருந்தும் நீர்வள ஆதாரத்துறை நிர்வாக குளறுபடி காரணமாக இன்னும் எங்கள் பகுதிக்கு தண்ணீர் வராமல், நாற்று போடாமல், விவசாயம் கைவிடப்படும் அவல நிலை உள்ளது.
எனவே, எங்கள் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, எங்களை உரிமைப் போராட்டத்திற்கு தள்ளி விடாமல், பாசனத்திற்கு தண்ணீரை உடனடியாக தந்து, அறுவடை காலம் வரை நீட்டித்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம்” இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.