சென்னை: நீதிமன்ற அறையில் வைத்து விசாரிக்கணும்.. மேகதாது வழக்கில் தமிழ் நாடு அரசின் சீராய்வு மனுவை நீதிமன்ற அறையில் வைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று முறையிடப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்காக நீண்டகால மாக கர்நாடக அரசு முயன்று வருகிறது. ஆனால் தமிழ் நாட்டிற்கான நீர்வரத்து பாதிக்கப்படும் என்பதால் தமிழ் நாடு அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த சூழலில், மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடக அரசுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கடந்த 2025 நவம்பர் மாதம் 13ம் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு வரும் புதன்கிழமை நீதிபதிகள் வினோத் சந்திரன், விபுல்.எம்.பஞ்சோலி முன்பு நீதிபதியின் அறையில் வைத்து விசாரிக்க பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேகதாது அணை விவகாரத்தில் விரிவான வாதங்கள் எடுத்து வைக்க வேண்டி இருப்பதால் சீராய்வு மனுவை நீதிபதியின் சேம்பரில் விசாரிக்காமல், வழக்கமான நடைமுறையாக நீதிமன்ற அறையில் வைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்வு முன்பு, தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி முறையிட்டுள்ளார்.
தமிழ் நாடு அரசின் இந்த முறையீட்டை பரிசீலனை செய்வதாக தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.