தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தொடர்ந்து பெய்த மழையால் வெயில் தாக்கம் குறைந்து குளிர் காற்று வீசியது. மேலும் நாற்று நட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆன நிலையில் சில பகுதிகளில் பெய்த மழை நாற்றின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே கோடைகாலம் போல் வெயில் கொளுத்தி எடுத்தது. பகல் முழுவதும் வெயில் கொளுத்தியதால் இரவு நேரத்திலும் அதிகளவு வெப்பம் நிலவியதால் பொதுமக்கள் தூக்கமின்றி தவித்தனர். ஏப்ரல், மே மாதங்களை போன்று வெப்பநிலை உயர்ந்து காணப்பட்டதால் அனைத்து தரப்பினரும் பாதிப்பு அடைந்தனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் பெருமளவு குறைந்துள்ளது.
தஞ்சை மாநகரில் இன்று அதிகாலை மழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விடியற்காலை 3 மணி முதல் தொடர்ந்து மழை பெய்து வந்தது. காலை 8 மணி வரைக்கும் மழை பெய்தது. இந்த மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
குறிப்பாக சம்பா, தாளடி சாகுபடியை மேற்கொள்ளும் விவசாயிகள் போதுமான ஆற்று தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வந்தனர். தற்போது கனமழை பெய்ததால் அவர்கள் சாகுபடி பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர். ஒரு சில பகுதிகளில் மட்டும் தாமதமாக விவசாயிகள் நாற்று நட்டுள்ளனர். இந்த இளம் நாற்றுகள் மட்டும் நீரில் மூழ்கி உள்ளது. பல பகுதிகளில் நாற்று நட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆவதால் இவை நன்கு வளர்ச்சியடையும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
சில பகுதிகளில் குறுவை நெல் அறுவடை பணி நடைபெற்று வருவதால் நெல்லின் ஈரப்பதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் 22 சதவீதம் வரை ஈரப்பதம் தளர்வு அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்