கோவை: தமிழகத்திற்கு கல்வி மற்றும் பேரிடர் நிதி வழங்க மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவை வந்ததை கண்டித்து, கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று காந்திபார்க் பகுதியில் கருப்புக்கொடி போராட்டம் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் வி.எம்.சி. மனோகரன் தலைமை வகித்தார்.
மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் கருப்புசாமி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பகவதி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதேபோல் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பீளமேடு பி.எஸ்.ஜி.டெக் முன்பு தபெதிக, இ.கம்யூ., திராவிடர் கழகம், திராவிடர் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பீளமேடு நம்பிக்கைக் கல்லூரி சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தடையை மீறி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.