சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை மாதம் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 28 பேர் மீதும் 4,832 பக்க குற்றப்பத்திரிக்கையை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் கைதானவர்கள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் எச்.எம்., சுப்பிரமணியம் மற்றும் ஜோதி ராமன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் குமரேசன் ஆஜரானார். அப்போது ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு வரப்பட்டு கை மாறியதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் வெடிகுண்டு எப்படி கொண்டு வரப்பட்டது என்று கேள்வி எழுப்பினர். மேலும் இது தொடர்பாக தனித்தனியாக விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு வரப்பட்ட சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் வெடிகுண்டு வெடித்தால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், நீதிமன்ற வளாகத்துக்குள் வெடிகுண்டு எப்படி கொண்டு வரப்பட்டது என்பது குறித்தும் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்திற்கு வருபவர்களை சோதனை செய்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் வாதிட்டனர். மேலும், இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த பரிந்துரைகள் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சிலை அருகே விரும்பத்தகாத சம்பவம் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.