தஞ்சாவூர்: தஞ்சாவூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (34). ஐ.டி. ஊழியர். பெங்களூரில் பணியாற்றி வருகிறார். இவரது வாட்ஸ் அப் நம்பருக்கு கடந்த 28.8.2025ல் ஒரு அழைப்பு வந்துள்ளது.
எதிர்முனையில் பேசிய மர்மநபர் ராஜேஷ்குமாரிடம் ஆன்லைன் டிரேடிங் செய்தால் அதிக லாபம் கிடைக்கிறது. டெபாசிட் செய்யப்படும் பணத்தை விட அதிக மடங்கு எடுத்து விடலாம். குறுகிய காலத்தில் கூடுதல் பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்ததைகள் கூறியுள்ளார்..
இதை உண்மை என்று நம்பிய ராஜேஷ்குமாரும் அந்த நபர் கூறிய செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். தொடர்ந்து மர்மநபர் கூறிய வங்கி கணக்கில் சில தவணைகளில் பணம் செலுத்தி உள்ளார். இதில் ஒரு முறை மட்டும் ரூ.4 ஆயிரம் லாபம் என்று ராஜேஷ்குமாருக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அந்த செயலியில் லாபம் என்று கோடிக்கணக்கில் காண்பித்துள்ளது.
இதை நம்பிய ராஜேஷ்குமார் மேலும் பல தவணைகளில் பணத்தை அனுப்பி உள்ளார். இப்படி 19 தவணைகளில் ரூ.57 லட்சத்து 3 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்துள்ளர். பின்னர் அந்த மர்மநபரை தொடர்பு கொள்ள முயன்ற போது சுவிட்ஸ் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. செயலியையும் இயக்க முடியாமல் போய் உள்ளது. தொடர்ந்து பல முறை ராஜேஷ்குமார் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜேஷ்குமார் இதுகுறித்து தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார்.
இதன் பேரில் சைபர் க்ரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ராஜேஷ்குமார் பணம் செலுத்திய வங்கி கணக்குகள் குஜராத், தெலுங்கானா, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு வங்கி கணக்குகள் என்று என்று தெரிய வந்தது. இதையடுத்து அந்தந்த வங்கிகளுக்கு இதுகுறித்து தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசார் தகவல் தெரிவித்தனர். இதில் ராஜேஷ்குமார் அனுப்பி வங்கி கணக்குகள் உள்ள 5 வங்கிகளில் ரூ.2.50 லட்சம் பணத்தை தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசார் முடக்கி உள்ளனர்.