புதுடெல்லி: வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயக்க கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
அவ்வாறு இயக்கப்படும் பேருந்துகளை நிறுத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பதிவுக் கட்டணத்தைக் குறைப்பதற்காக பல தனியார் பேருந்து நிறுவனங்கள் நாகாலாந்து உள்ளிட்ட பிற மாநிலங்களில் ஆம்னி பேருந்துகளைப் பதிவு செய்து தமிழகத்தில் இயக்கி வருகின்றன.
இதனால், மாநில வருவாய் பாதிக்கப்படும் எனக் கூறி, வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயக்க அரசு தடை விதித்தது.
தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டத்தின்படி, தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படுகிறது.
இதனால், வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்றும், மீறி இயக்கப்படும் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரித்தது.
விளம்பரம் இந்துதமிழ்12ஜூன்3 இந்த உத்தரவை எதிர்த்து தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சார்பில் கே.ஆர்.சுரேஷ்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ‘கேரளாவில் இருந்து இயக்கப்படும் தனியார் ஆம்னி பஸ்கள் அகில இந்திய சுற்றுலா அனுமதி பெற்று தமிழகம் வழியாக பிற மாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது.
ஆனால், தமிழக அரசின் உத்தரவால், கேரளாவில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பஸ்களை தமிழகம் மற்றும் தமிழகம் வழியாக இயக்க முடியாது’ என, கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான விடுமுறை கால சிறப்பு அமர்வில் நடைபெற்றது. அப்போது, தமிழக அரசு தரப்பில், ‘தமிழகத்துக்கு ஏற்படும் வருவாய் இழப்பை கருத்தில் கொண்டு இந்த உத்தரவிடப்பட்டது. வெளி மாநில பதிவு எண் கொண்ட சுற்றுலா வாகனங்களை வழக்கமான சேவையாக இயக்குவதற்கு எதிராக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து, அகில இந்திய சுற்றுலா அனுமதி பெற்ற வெளிநாட்டு பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயக்குவதை தமிழக அதிகாரிகள் தடுக்கக் கூடாது என கூறி, தமிழக அரசின் உத்தரவுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்.
இந்த வழக்கில் தமிழக அரசு விரிவான பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி விசாரணையை ஒத்திவைத்தது.