சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:-
கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜம்புகுட்டப்பட்டியில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தென்னிந்தியப் பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு காற்று சந்திக்கும் பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 22 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 20 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மழை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் பலத்த காற்று வீசியது.
கடந்த சில நாட்களாக கொளுத்தும் கோடை வெயிலில் இருந்து சென்னைவாசிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். சென்னையில் மதியம் 1 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் 10 செ.மீ மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.