தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று மாலை பெய்த மழையால் ஜில்லென்று மாறியது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், அம்மாசத்திரம், கருப்பூர், செட்டி மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் சாரல் மழையாக தொடங்கி மிதமான மழையாக மாறியது.
இதே போல் சுற்றுப்பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. கும்பகோணம் நகரப் பகுதிகளில் பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்து மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆனால் இன்று காலை முதல் மீண்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதால் மக்கள் அவதி அடைந்தனர். வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க இளநீர் பழச்சாறு கடைகளை மக்கள் தேடிச்சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல் தஞ்சாவூர் அருகே வல்லம், ஆலக்குடி மற்றும் சுற்றுப் பகுதிகளில் சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது.
காலையில் கடும் பனியும், மதிய வேளையில் கடும் வெப்பமும் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் வல்லம், ஆலக்குடி, கல்விராயன் பேட்டை, சித்திரக்குடி, எட்டாம் நம்பர் கரம்பை உட்பட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. காலை முதல் இரவு வரை விட்டுவிட்டு சாரல் மழை பெய்ததால் கடந்த சில நாட்களாக இருந்து வந்த வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து இதே போல் சாரல் மழை பெய்தால் வயலை உழுது குறுவை சாகுபடிக்கு தயார் செய்து விடலாம் என விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.