திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து நாள்தோறும் பக்தர்கள் வந்து செல்வதை கருத்தில் கொண்டு, திருவண்ணாமலை ரயில் நிலையத்தை ‘முனையம்’ (டெர்மினல்) ஆக மாற்ற தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தின் சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும், உரிய ஒப்புதல்களைப் பெற்றபின் அதிகாரபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், தற்போது திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் ரூ.7.86 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் கூடுதல் எண்ணிக்கையில் வருவதை முன்னிட்டு, கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். முன்னையமாதல் நிகழ்ந்தால், இந்த நிலையத்திலிருந்து நேரடி ரயில்கள் பல மாநிலங்களுக்கு இயக்கப்படும் வாய்ப்பு உருவாகும்.
இந்த மாற்றம், குறிப்பாக தமிழகத்தின் உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமல்ல, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வருகை தரும் பக்தர்களுக்கும் பயணத்தில் சிறந்த வசதிகளை ஏற்படுத்தும். முக்கியமான பவுர்ணமி நாட்கள் மற்றும் தீபத்திருவிழாக்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், தற்போது இயங்கும் மெமு எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட உள்ளன.
முனையமாதலின் மூலம் திருவண்ணாமலை புனிதத் தலமாக மட்டுமல்ல, பயண வசதிகள் பூரணமடைந்த முக்கிய போக்குவரத்து மையமாகவும் வளரக்கூடும். பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் இந்த மாற்றத்தை வரவேற்று மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.