சென்னை: சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டசபை தொகுதிகளின் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அதிகாரி/ஆணையர் குமரகுருபரன் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளிலும் இன்று முதல் வாக்காளர் விவரம் சரிபார்க்கும் பணி நடைபெறும் என ஆணையர் தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 2025-ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் நடைபெற உள்ளது.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அதிகாரி/ஆணையர் குமரகுருபரன் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ரிப்பன் கட்டிட வளாகத்தில் நேற்று நடைபெற்றது. தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியல் 6.1.2025 அன்று வெளியிடப்படும், இது 1.1.2025 தகுதி நாளாகும். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளிலும், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடத்தப்படும்.
சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர் விவரங்களையும் சரிபார்க்கும் பணி 20.8.2024 முதல் 18.10.2024 வரை வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வாக்காளர் உதவி எண் 1950 செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். இதன் தொடர்ச்சியாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், நீக்குதல் மற்றும் வாக்குச்சாவடி மையங்களை பிரித்தல், மாறுதல், கட்டுதல், பெயர் மாற்றம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
முதற்கட்டமாக வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வரும் 20ம் தேதி (இன்று) முதல் வீடு வீடாக சென்று குடும்பத்தில் உள்ள வாக்காளர்களின் விவரங்களை சரிபார்க்க உள்ளனர். வாக்காளர் கணக்கெடுப்புக்கு வரும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடம் பொதுமக்கள் தேவையான விவரங்களை அளித்து ஒத்துழைப்பு அளிக்குமாறு ஆணையர் குமரகுருபரன் கேட்டுக்கொண்டுள்ளார்.