கேரளா: திருச்சூரில் இருந்து ஆரம்பிக்கிறது கேரளாவின் அரபிக் கடற்கரையோரம். திருச்சூரில் இருந்து 20 கிமீ தொலைவில் வாடனாபள்ளி பீச் இருக்கிறது.மிக அமைதியான எந்த ஒரு வணிக விளையாட்டுகளும், ஹோட்டல்களும் இல்லாத ஒரு கடற்கரை கிராமம்.
தென்னைகள் நிறைந்த இந்த கிராமத்தில் ரோட்டை ஒட்டியே இந்த பீச் இருக்கிறது.மிகவும் சுத்தமாக இருக்கிறது.ஆட்கள் நடமாட்டம் அதிகமின்றி இருக்கிறது.ஆர்ப்பரிக்கும் அலைகளை கண்டவுடன் மனம் குதூகலமாகிறது.கடல் குளிப்பதற்கு ஏதுவாக இருக்கிறது.ஆனால் குளித்து முடித்தவுடன் நல்ல தண்ணீரில் குளிக்கவும், உடைகளை மாற்றவும் வசதிகள் இல்லை.திருச்சூரில் அறை எடுத்து தங்கி இருந்தால் அங்கு சென்று மாற்றிக்கொள்ளலாம்.
இன்னும் வணிக மயம் ஆகாமல் இருப்பதால் மிகவும் சுத்தமாக இருக்கிறது.உள்ளூர் மக்களுக்கு ஒரு பொழுது போக்கு இடமாக இருக்கிறது. திருச்சூரை அடுத்து உள்ள குருவாயூரில் சாவக்காடு பீச் இருக்கிறது.இங்கே மீன் பிடித்தல் அதிகம் நடைபெறும் இடமாகும்,கடற்கரை ஓரங்களில் எப்பவும் பெரிய பெரிய மீன்பிடி படகுகள் நிறுத்தப்பட்டிருக்கும்.சுற்றுலாவாசிகளும் அதிகம் குவிந்து இருப்பர். குருவாயூர் கோவிலுக்கு வந்தவர்கள் ஒரு எட்டு இந்த பீச்சிற்கும் போய்ட்டு வருவர்.இந்த இரண்டு கடற்கரைக்கும் கோவையில் இருந்து செல்ல அதிகபட்சம் நான்கு மணி நேரம் மட்டுமே பிடிக்கும்.
அதுவும் வாடனாபள்ளி பீச் மிகவும் அருகில் இருப்பதால் மூன்று மணி நேரத்திற்குள் சென்று விடலாம்.இங்கிருந்து கேரள வரைபடத்தின் மேலும் கீழுமாய் பரந்து விரிந்த அரபிக்கடலின் கடற்கரை ஓரங்கள் இருக்கிறது.
இதை அடுத்து எர்ணாகுளத்தில் உள்ள செராய் பீச் தான்.இது மிகவும் வணிக மயமாக்கப்பட்ட ஒரு சுற்றுலாத்தலம்.முழுக்க முழுக்க சுற்றுலாப்பயணிகளை கொண்டே இயங்குகிறது.தங்குவதற்கு ஏற்ற அனைத்து வசதிகளும் இங்கே இருக்கின்றன. கோவையில் இருந்து ஐந்து மணி நேரத்திற்குள் சென்றுவிடலாம்.இங்கிருந்தும் கூட கொச்சின் நகரத்திற்கு சென்று விடலாம்.கொச்சினில் இருந்து ஃபோர்ட் கொச்சின் செல்லலாம்.இது முழுக்க முழுக்க ஒரு தீவு என சொல்லலாம்.கடலால் சூழ்ப்பட்ட ஒரு நகரமாய் இந்த ஃபோர்ட் கொச்சின் இருக்கிறது.
கோவையில் இருந்து ஒரு நாள் சுற்றுலாவாக கேரளாவின் கடற்கரை பகுதிகளுக்கு செல்லலாம்.நல்ல மீன் உணவுகளை உண்டு விட்டும் வரலாம்.கேரளாவில் தங்கி இன்னும் பல இடங்களை பார்க்க முடியுமென்றால் தாராளமாக முடியும்.கொச்சின் மட்டும் எனில் சாலக்குடியில் உள்ள அதிரப்பள்ளி அருவி, கோவில்கள், படகு பயணம் என அனைத்தையும் அனுபவித்து வரலாம்.கேரளாவின் ஒவ்வொரு மாவட்டமும் ஒரு சிறப்புகளை கொண்டிருக்கிறது,ஒட்டு மொத்தமாய் நல்ல உணவு, பயணம் மேற்கொள்ள கேரளா எப்பவும் சிறப்பு.