May 1, 2024

குழந்தைகளுடன் தொலைதூர பயணமா? நீங்கள் என்ன செய்யணும்!!!

சென்னை: பயணத்தின்போது பச்சிளம் குழந்தைகளை அழைத்துச் செல்வது, மிகுந்த சிரமமான ஒன்று. குறிப்பாக நாம், தொலைதூர பயணத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே குழந்தையுடன் பயணிக்கும்போது கவனிக்க வேண்டியவை மற்றும் தவறாமல் எடுத்து வைக்க வேண்டிய பொருட்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்வோம்.

குழந்தைகளுக்கு போடவேண்டிய தடுப்பூசிகளை முதலில் போட்டுவிட வேண்டும். எந்த ஊரில் என்ன நோய் பரவல் இருக்கும் என்பதெல்லாம் தெரியாது. எதுவாக இருந்தாலும் உடனடியாக குழந்தையைத்தான் தாக்கும். ஆக, நாம் போகும் ஊரில் எதாவது வைரஸ் காய்ச்சல் பரவுகிறதா? வேறு எதாவது நோய் தொற்று இருக்கிறதா என்பதையெல்லாம் முன்கூட்டியே அலசி, அதற்கேற்ப தடுப்பூசி போட்ட பிறகே பயணிக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த பயணத்தை ரத்து செய்துவிடுங்கள்.

குழந்தைகளுக்கான உணவு விஷயத்தில் கவனமாகவே இருக்க வேண்டும். எத்தனை மாத குழந்தை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அரை திட உணவோ திரவ உணவோ,குழந்தைக்கு ஏற்றதை தயாராக வைத்து கொள்ள வேண்டும். வழியில் வாங்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் பயணத்தை ஒருபோதும் தொடங்கவே கூடாது.

எந்த ஊருக்கு செல்கிறோம் எவ்வளவு நேரம் ஆகும் என்பதைப் பற்றிய சரியான திட்டமிடலுடனும், அதற்கான முன்னேற்பாடுகளுடனும் பயணத்தை தொடங்க வேண்டும். குறைந்தபட்சம் அடுத்த 5 முதல் 8 மணி நேரத்துக்கான உணவை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சி ஆற வைத்த பாலை பாதுகாப்பான ஒரு புட்டியில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், அவர்களுக்கு ஏற்ற உணவை எடுத்துக்கொள்வது மிக அவசியம். அலைச்சல், மன உளைச்சல் போன்ற காரணங்களால், குழந்தைகளுக்கு உணவளிப்பது தடைபடக் கூடாது. பழம், ஹோம்மேட் ரொட்டிகள் எல்லாம் பேக் செய்து கொள்ளுங்கள்.

குழந்தை எவ்வளவு நேரத்துக்கு ஒருமுறை சிறுநீர் கழிக்கும், மலம் கழிக்கும் என்பதை நாம் ஓரளவுக்கு உணர்ந்திருப்போம். அதற்கேற்ற வகையிலான டையபர்களை எடுத்துக்கொள்வது சிறந்தது. இதில், முக்கியமாக கவனிக்க வேண்டியது, குழந்தைக்கு அணிவிக்கும் டையபர் காற்றோட்டமானதா என்பது. சில இறுக்கமான டையபர்களால் தோல் சிவந்து போதல், அரிப்பு, தடிப்பு போன்ற பாதிப்புகளும் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இதனால், சரியான டையபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். தவிர, தொடர்ச்சியாக ஒரே டையபரை அணிந்திருக்கச் செய்யாமல், ஒருமுறை மலம் அல்லது சிறுநீர் கழித்த பிறகு சுத்தம் செய்ய தேவையான தண்ணீர் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பச்சிளம் குழந்தைகளை வைத்துக்கொண்டு நம்மால் பயணம் செய்யவே முடியாது. கூடுமானவரை குழந்தை ஓரளவுக்கு வளரும் வரையில் பெற்றோரில் ஒருவர் மட்டுமே வெளியூர் பயணத்தை வைத்துக்கொள்வது சிறந்தது. தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே குடும்பத்துடன் பயணிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!