May 6, 2024

110 யூடியூப் சேனல்களை முடக்க நடவடிக்கை… மத்திய அமைச்சர் தகவல்

புதுடில்லி: மத்திய அமைச்சர் தகவல்… இந்தியாவுக்கு எதிராக செய்திகள் வெளியிடும் 110 யூடியூப் சேனல்களை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் 248 சமூக ஊடக கணக்குகளையும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69A இன் கீழ் எடுக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்கும் யூடியூப் சேனல்கள் பற்றிய தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. கடந்த காலங்களில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதும் யூடியூப் சேனல்கள், சமூக ஊடக கணக்குகள் பற்றிய விபரங்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டதில்லை.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் தேசப்பாதுகாப்புக்கு எதிரான 104 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

கட்டற்ற சுதந்திரத்தை வழங்கும் இணையதளங்கள் வெளியிடும் செய்திகள் சென்ஸார் செய்யப்படவேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. வன்முறை, பாலியல் சம்பந்தப்பட்ட காட்சிகளை தடை செய்வதில் இதுவரை பெரிய அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதில்லை. ஆனால், தேசப்பாதுகாப்பு விஷயத்தில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் போலியான தகவல்களை பரப்பியதன் காரணமாக, யூடியூப் சேனல்கள், வீடியோக்கள், பேஸ்புக் கணக்குகள், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் கணக்குகள் மற்றும் இணையதளங்களை முடக்க நிறுவனங்களுக்கு உத்தரவுகள் பறக்கின்றன. பல இணைப்புகளையும் கணக்குகளையும் முடக்குமாறு சமூக ஊடக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இது தவிர பிரபல செய்தி நிறுவனங்களின் பெயரில் போலியான செய்தி நிறுவன கணக்குகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. போலி கணக்குகளையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டியிருக்கிறது. பார்வையாளர்களை தவறாக வழிநடத்துவதாக சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனங்கள் தரும் புகார்களை பரிசீலித்து, சமூக ஊடக நிறுவனங்களுக்கும் பரிந்துரை செய்ய வேண்டியிருக்கிறது.

இனி வரும் காலங்களில் பொதுவெளியில் நடைபெறும் குற்றங்களை விட இணைய வழியில் நடைபெறும் குற்றங்கள் அதிகரிக்கும் என்கிற நிலையில் சென்ஸார், சைபர் கிரைம் நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டியது அவசியமாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!