கர்நாடக மாநிலத்தில் மைசூரு நகர மேம்பாட்டு முறைகேடு வழக்கில் முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது மனைவி பார்வதி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மைசூரு நகர மேம்பாட்டு ஆணையமான ‘முடா’விலிருந்து சட்டவிரோதமாக 14 மனைகள் பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து லோக் ஆயுக் அமைப்பு வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது.

இதே வழக்கை தொடர்ந்து மத்திய அரசின் அமலாக்கத்துறையும் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி, அமலாக்கத்துறை சித்தராமையாவுக்கு சொந்தமான 92 அசையா சொத்துகளை முடக்கியதாக அறிவித்தது. இந்த சொத்துகளின் சந்தை மதிப்பு சுமார் ரூ.100 கோடி எனக் கூறப்படுகிறது.
அமலாக்கத்துறை இந்த முடிவை PMLA, 2002 சட்டத்தின் கீழ் எடுத்துள்ளதாகவும், இதுவரை இந்த வழக்கில் ரூ.400 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டது.
மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் தற்போதைய முதலமைச்சராக இருக்கும் சித்தராமையா இவ்வழக்கில் முக்கியமான நபராக உள்ளார். இந்த வழக்கு அரசியல் மற்றும் நிர்வாகத்துறையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகின்றது.