அடிஸ் அபாபா: எத்தியோப்பியாவின் அம்ஹாரா மற்றும் டிக்ரே மாகாணங்களில் மீண்டும் தீவிரமடைந்துள்ள மோதல்களால் பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் வெளியிட்டுள்ள தகவலில், வடக்கு எத்தியோப்பியாவில் நடைபெற்று வரும் தாக்குதல்கள் ஏற்கெனவே பலவீனமான நிலையில் உள்ள சுகாதாரக் கட்டமைப்பை மேலும் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அம்ஹாரா பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாமிலும், டிக்ரே பகுதியில் உணவு பெறுவதற்காகச் சென்ற பொதுமக்கள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் குழந்தைகள் மற்றும் பிறந்த குழந்தை உட்படப் பலர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், உயிரிழப்புகளின் துல்லியமான எண்ணிக்கை மற்றும் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் குறித்த விவரங்கள் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை.
மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் சேவைகளும் பாதுகாப்பற்ற சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.
மருத்துவப் பொருட்களைத் தேவையான இடங்களுக்கு எடுத்துச் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஐ.நா. அமைப்புகளுடன் இணைந்து உலக சுகாதார அமைப்பு மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது.
2022 நவம்பரில் எத்தியோப்பிய மத்திய அரசுக்கும் டிக்ரே கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது. ஆனால் தற்போது மீண்டும் மோதல்கள் அதிகரித்திருப்பது அந்த ஒப்பந்தத்தின் நிலைத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மனிதாபிமான உதவிகள் தடையின்றிச் சென்றடையவும் அனைத்து தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
