தைபே: தைவான் கடல் எல்லைப் பகுதிகளில் சீனாவின் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், தனது கடல் வளங்கள் மற்றும் கடல் தகவல்களைத் தானே பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தைவான் அரசு தெரிவித்துள்ளது.
தைவானின் கடல்சார் விவகாரக் கவுன்சில் தலைவர் குவான் பி-லிங், தெற்கு தைவானின் தைனான் நகரில் நடைபெற்ற கடல் ட்ரோன் தொடர்பான கருத்தரங்கில் பேசும்போது, தைவானின் கடல் பகுதிகளைப் பற்றிய ஆய்வுகளைத் தைவானே மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தைவானைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் சீனக் கடலோரக் காவல் படையினரின் ரோந்துப் பணிகள் அதிகரித்துள்ளன. சீனாவின் ஆய்வுக் கப்பல்களும் தைவான் கடல் பகுதிகளுக்கு அருகில் செயல்பட்டு வருவதாக தைவான் குற்றம்சாட்டியுள்ளது.
கடல் வழிப் போக்குவரத்து, எரிசக்தி விநியோகம், அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு கடல் பாதைகள் முக்கியமானவை. குறிப்பாக சர்வதேச வர்த்தகச் சங்கிலியில் தைவானின் புவியியல் அமைவிடம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
சீனாவின் நடவடிக்கைகள் நேரடி ராணுவ மோதலாக இல்லாவிட்டாலும், தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் அழுத்தம் மூலம் தைவானின் பாதுகாப்புக்கு சவால் ஏற்படுத்துவதாக அந்நாட்டு அதிகாரிகள் கருதுகின்றனர்.
இதனை எதிர்கொள்ள கடலோரக் காவல் படைக்கு கூடுதல் உபகரணங்கள், கண்காணிப்பு வசதிகள் மற்றும் உளவுத் தகவல் சேகரிப்பு திறன்களை அதிகரிக்க வேண்டும் என தைவான் வலியுறுத்தியுள்ளது.
தைவானைத் தனது நாட்டின் ஒரு பகுதியாக சீனா கருதுகிறது. அதேவேளையில் தைவான் தனது ஜனநாயக ஆட்சிமுறையையும் தனித்த நிர்வாகத்தையும் தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. இந்த அரசியல் முரண்பாடு காரணமாக இரு தரப்புக்கும் இடையே கடல் மற்றும் ராணுவப் பதற்றம் நீடித்து வருகிறது.
