சியோல்: செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் உலக நாடுகளுடன் போட்டியிடும் வகையில் தென் கொரியா மிகப்பெரிய முதலீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் செயற்கை நுண்ணறிவு மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அதிபர் லீ ஜே மியுங் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டை ஆதரித்து உரையாற்றிய அவர், செயற்கை நுண்ணறிவுத் துறையில் 21.3 டிரில்லியன் வோன் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.4 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையாகும்.
நடப்பு ஆண்டை விட இந்த முதலீடு ஏறக்குறைய இரு மடங்காக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர் உற்பத்தி, இயந்திர மனிதர்களை மையமாகக் கொண்ட பிசிக்கல் ஏஐ தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான தரவு மையங்கள் ஆகியவை இந்த முதலீட்டின் முக்கிய இலக்குகளாக உள்ளன.
தென் கொரியா ஏற்கெனவே உலகின் முன்னணி செமிகண்டக்டர் உற்பத்தி நாடுகளில் ஒன்றாக உள்ளது. சாம்சங், எஸ்கே ஹைனிக்ஸ் போன்ற நிறுவனங்கள் உலகளாவிய சிப் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இந்நிலையில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வளர்ச்சியில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் போட்டியிட தென் கொரியா முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அடுத்த ஆண்டுக்கான அரசுச் செலவினத்தை 12.8 சதவீதம் அதிகரித்து 820.9 டிரில்லியன் வோனாக நிர்ணயிக்க அரசு திட்டமிட்டுள்ளது. தொழில்நுட்பத் துறையில் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த முடியும் என தென் கொரிய அரசு நம்புகிறது.
இந்த முதலீட்டுத் திட்டம் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புதிய தொழில்முனைவோருக்கு கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
