செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் சீனாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கா புதிய ஏற்றுமதி விதிமுறைகளை அறிவித்துள்ளது. மேம்பட்ட கணினி சில்லுகள் மற்றும் ஏஐ செயலிகளுக்கான தொலைதூர அணுகலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அமெரிக்க வர்த்தகத் துறை மேற்கொண்டுள்ளது.
சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பப்படும் குறிப்பிட்ட வகை அதிநவீன ஏஐ சில்லுகளுக்கு ஏற்றுமதி உரிமம் பெற வேண்டிய கட்டாயம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், சீன நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் வெளிநாட்டு தரவு மையங்களின் செயல்பாடுகளுக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள் வெளிநாடுகளில் உள்ள தரவு மையங்கள் வழியாக அமெரிக்காவின் மேம்பட்ட கணினி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது. இதற்காக நிறுவனங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உரிய அனுமதிகளைப் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த முடிவு உலகளாவிய தொழில்நுட்பச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தகம், அரிய கனிமங்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றில் போட்டி நீடித்து வரும் நிலையில், புதிய கட்டுப்பாடுகள் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடும்.
