வாஷிங்டன்: எதிரிகளின் விண்வெளி சார்ந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்கால போர்களில் செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி கட்டமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கும் என்ற பாதுகாப்பு ஆய்வாளர்களின் கருத்துகளுக்கு மத்தியில், அமெரிக்கா 2019-ம் ஆண்டு விண்வெளிப் படையை உருவாக்கியது. இதேபோல் ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் விண்வெளி பாதுகாப்புக்கான தனிப்பட்ட அமைப்புகளை உருவாக்கியுள்ளன.
அமெரிக்க விமானப்படைச் செயலாளர் டிராய் மெய்ங்க், மேரிலேண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது, விண்வெளி சார்ந்த அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாகவும், அவற்றை எதிர்கொள்ள அமெரிக்க விண்வெளிப் படை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே, ஓய்வுபெற்ற அமெரிக்க விண்வெளிப் படை அதிகாரி சார்லஸ் கால்பிரெத், எதிரிகளின் செயற்கைக்கோள் திறன்களை முடக்க லேசர் மற்றும் ஜாமிங் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து சீனா மற்றும் ரஷ்யா கவலை தெரிவித்துள்ளன.
விண்வெளியை போர்க்களமாக மாற்றக் கூடாது என்றும், அங்கு ஆயுதங்களை குவிப்பது புதிய ஆபத்துகளை உருவாக்கும் என்றும் சீனா தெரிவித்துள்ளது. ரஷ்யாவும் விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் செயற்கைக்கோள் எதிர்ப்பு திறன் கொண்ட ஏவுகணை தொழில்நுட்பங்கள் இருப்பதாக பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
விண்வெளியில் ஆயுதப் போட்டி தீவிரமடைந்தால் தகவல் தொடர்பு, வழிகாட்டுதல், வானிலை கண்காணிப்பு உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் செயற்கைக்கோள் சேவைகளும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
