டெல் அவிவ்: பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்… ஈரான் தாக்குதல் எதிரொலியாக இஸ்ரேலில் பாதுகாப்பாக இருக்குமாறு இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானின் பதிலடி தாக்குததலின் எதிரொலியாக, இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள் பயணிகள் எச்சரிக்கையாக இருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தங்கள் நாட்டின் அணுசக்தி தளங்களை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல் மீது இன்று (சனிக்கிழமை) அதிகாலை முதல் ஈரான் பதிலடியாக ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதைத் தொடர்ந்து, இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டினருக்கு இந்திய அரசு அவசர ஆலோசனைகளை வழங்கியது. அதே நேரத்தில் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் ஈரானிய வான்வெளியைத் தவிர்த்து மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.
இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியர்களும் விழிப்புடன் இருக்கவும், இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் உள்நாட்டுப் படையினரின் அறிவுறுத்தல்களின்படி பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். தயவுசெய்து எச்சரிக்கையாக இருங்கள். நாட்டுக்குள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்திவிடுங்கள். பாதுகாப்பு முகாம்களுக்கு அருகில் இருங்கள். இந்திய குடிமக்களின் பாதுகாப்பு தொடர்பான சூழ்நிலையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்று பதிவிட்டுள்ளது.
மேலும், “ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், தூதரகத்தின் 24X7 உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். தொலைபேசிக்கு +972 54-7520711, +972 54 3278392 எண்களையும், cons1.telaviv@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியையும் தொடர்பு கொள்ளுங்கள்” என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.