நியூயார்க்: பூமியில் விழுந்து நொறுங்கிய அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகளின் (UFO) இடிபாடுகளில் இருந்து, அமெரிக்க அரசாங்கம் மொத்தம் நான்கு வகையான வேற்றுக்கிரக ஏலியன் உயிரினங்களை மீட்டுள்ளதாகச் சிஐஏ உளவு அமைப்பின் முன்னாள் ஆய்வாளர் ஹால் புட்ஹாஃப் தெரிவித்துள்ளார்.
தி டைரி ஆஃப் எ சிஇஓ என்ற பிரபல பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், விண்கல மீட்புப் பணிகளில் நேரடியாக ஈடுபட்ட உயர் அதிகாரிகள் தன்னிடம் இந்த ரகசியங்களை உறுதிப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்பொழுது தங்களின் அதிகாரப்பூர்வ அரசாங்க ஆவணங்களான ஏலியன் ஃபைல்ஸ் (Alien Files) தொகுப்பின் முதற்கட்டப் பகுதிகளைப் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட்டுள்ளார்.
இதன் பின்னரே ஏலியன்கள் குறித்த விவாதங்கள் உலகளவில் தற்பொழுது காட்டுத்தீயாகப் பரவத் தொடங்கியுள்ளன.
வேற்றுக்கிரக உயிரினங்கள் பூமியில் இருப்பது உண்மைதான் என்று முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அண்மையில் கூறியதைத் தொடர்ந்து, பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தலைமையிலான குழுவை அமைத்து இந்த ரகசியங்களை வெளியிட டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
ஆய்வாளர் புட்ஹாஃபின் நீண்டகால கூட்டாளியான எரிக் டேவிஸ், அமெரிக்காவிடம் சிக்கிய அந்த நான்கு ஏலியன் இனங்கள் கிரேஸ், நார்டிக்ஸ், இன்செக்டாய்ட்ஸ் மற்றும் ரெப்டிலியன்ஸ் என்று வகைப்படுத்தியுள்ளார்.
இதில் கடந்த 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற புகழ்பெற்ற ரோஸ்வெல் யுஎஃப்ஓ விபத்தில் கிரேஸ் (Grays) எனப்படும் ஏலியன்கள் மீட்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த கிரேஸ் இன ஏலியன்கள் சுமார் நான்கு அடி உயரமும், பெரிய கண்களும், தலைமுடிகளும் இல்லாத உடலமைப்பைக் கொண்டவை என்றும் அவர் விளக்கியுள்ளார்.