ஜெருசலேம்: ஹமாஸ் படையினருக்கு எதிரான இஸ்ரேலின் போர் காசாவில் சீக்கிரம் முடிவடைய வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நீண்டகாலமாக மோதல் நடைபெற்று வருகிறது. காசா பகுதியில் தொடர்ந்து ராணுவ தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 62,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர் என காசா சுகாதார அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் ராணுவத்தினர் பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பாதுகாப்புப் படையினரிடம் பேசிய நெதன்யாகு, “ஹமாஸ் அக்டோபர் 7ம் தேதி நடத்திய தாக்குதல் மனிதாபிமானமற்றது. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்கள், எரிக்கப்பட்ட குழந்தைகள், பிணைக்கைதிகள் – இவற்றை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். அவர்களை மீண்டும் கொண்டு வருவோம்” என்றார்.
அவர் மேலும், “நாம் ஹிஸ்புல்லா, ஈரான், ஹவுதி படையினருடனும் போராடினோம். பல கடினமான முடிவுகளை எடுத்து வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளோம். இப்போது காசா போரிலும் வெற்றியடைவோம். இஸ்ரேல் மக்களின் நம்பிக்கையுடன், கடவுளின் அருளால் நிச்சயம் வெற்றியுடன் முன்னேறுவோம்” என உறுதியளித்தார்.
இஸ்ரேல் அரசு போரின் இறுதி கட்டத்தை முன்னெடுத்துக் கொண்டு வருவதாகவும், ஹமாஸ் ஆற்றலை முற்றிலும் ஒழிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் நெதன்யாகு வலியுறுத்தினார்.