டெஹ்ரான்: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் தொடர்ந்து கடும் வடிவம் எடுத்து வரும் நிலையில், அமெரிக்கா ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்களை தாக்கியதை அடுத்து, ஹோர்முஸ் நீரிணையை மூட பார்லிமென்ட் அனுமதி அளித்துள்ளது. இந்த நடவடிக்கை உலகளாவிய எரிசக்தி சந்தையை பெரிதும் பாதிக்கக்கூடியதாக உள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் கடந்த 13ம் தேதி தொடங்கிய தாக்குதலுக்கு பதிலாக அமெரிக்கா நடான்ஸ், இஸ்பஹான் மற்றும் பார்டோ ஆகிய அணு மையங்களை தாக்கியது.

இதனையடுத்து ஹோர்முஸ் நீரிணை கடல் வழியை மூடுவதற்கான நடவடிக்கையை ஈரான் அரசு அறிவித்துள்ளது. வளைகுடா நாடுகளிலிருந்து உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் கடத்தும் முக்கிய கடல் பாதையான இந்த நீரிணை மூடப்படுவதால் எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகளாவிய எண்ணெய் தேவையின் சுமார் 20% இந்த வழியே கடத்தப்படுவதால் பெரும் பஞ்சம் ஏற்படும் என்கிறார்கள் நிபுணர்கள்.
இந்த நிலை தொடருமாயின் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கூடி, பொதுமக்களின் வாழ்க்கை நேரடியாக பாதிக்கப்படும். இதன் தாக்கம் இந்தியா உள்ளிட்ட எண்ணெய் இறக்குமதி அதிகம் உள்ள நாடுகளில் மிகவும் கடுமையாக இருக்கும். இதனால், பொருளாதார அளவிலும் இந்த நிலைமை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.