டெல் அவிவ்: லெபனானின் தெற்கு கடற்கரை மீது விரைவில் தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தும் போரில் ஹமாசுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
இதையடுத்து ஹிஸ்புல்லா இயக்கத்தினரை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதனால் ஹிஸ்புல்லா-இஸ்ரேல் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது.
லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. குறிப்பாக தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படுகிறது.
மேலும் தெற்கு லெபனான் எல்லைக்குள் நுழைந்த இஸ்ரேல் படையினர் தரைவழித் தாக்குதலையும் தொடங்கினர். இதற்கிடையே லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் விரிவுப்படுத்தியது. அந்நாட்டின் வடக்கு பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தநிலையில் லெபனானின் தெற்கு கடற்கரையில் தாக்குதல் தொடங்கப்பட உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, லெபனானின் தெற்கு கடற்கரையில் விரைவில் ராணுவ நடவடிக்கைகளை தொடங்க உள்ளோம். எனவே பொதுமக்கள் கடற்கரைகளில் இருந்து விலகி இருக்குமாறு வலியுறுத்துகிறோம்.
மீனவர்கள் கடலில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்துக்கு வெளியே இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். லெபனானின் அவாலி ஆற்றின் தெற்கே வசிப்பவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக கடற்கரைகள் மற்றும் கடலில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.