பாகிஸ்தான்: ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் பாகிஸ்தான் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் இன்னும் பல இந்தியர்களின் நெஞ்சைவிட்டு அகலாதவண்ணம் உள்ளது. இந்த தாக்குதலால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மாறிமாறி கெடுபிடிகளை விதித்துள்ளன.
மேலும் இதன் காரணமாக இரு நாடுகளிடையே விரிசல் அதிகரித்துள்ளது. தவிர, இருநாட்டு எல்லையிலும் போர்ப் பதற்றம் நிலவுகிறது. இருநாடுகளும் எல்லைப் பகுதியில் படைகளைக் குவித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இருநாடுகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
குறிப்பாக, பாகிஸ்தான் மீது இந்தியா அடுத்த 36 மணி நேரத்தில் ராணுவ தாக்குதலைத் தொடுக்கலாம் என அந்நாட்டு ராணுவத்திற்கு உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் பாகிஸ்தான் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்கித், ஸ்கர்டு ஆகிய நகரங்களுகு செல்லும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக விமானச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.