போர்ட் ஆப் ஸ்பெயின்: பிரதமர் மோடி புகழாரம்… டிரினிடாட் பிரதமர் கம்லா பெர்ஷத், பிஹார் மாநிலத்தின் மகள் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரேசிலில் பிரிக்ஸ் மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதை முன்னிட்டு கானா, டிரினிடாட் அண்ட் டொபாகோ, அர்ஜென்டினா, நமீபியா ஆகிய 4 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக கானா நாட்டுக்கு கடந்த 2,3-ம் தேதிகளில் சுற்றுப் பயணம் செய்தார். கானா பயணத்தை முடித்துக் கொண்டு டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டுக்கு பிரதமர் மோடி முதல்முறையாக சென்றுள்ளார். டிரினிடாட் பிரதமர் கம்லா அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அங்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
கரீபியன் கடல் பகுதியில் உள்ள 2 தீவுகள் அடங்கிய நாடுதான் டிரினிடாட் அண்ட் டொபாகோ. வெனிசுலா நாட்டுக்கு அருகில் இந்த நாடு உள்ளது. இந்த நாட்டின் பிரதமராக கம்லா பெர்ஷத் பிசெஸ்ஸார் பதவி வகிக்கிறார். இவரை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். இந்தியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, ‘‘டிரினிடாட் பிரதமர் கம்லா பெர்ஷத், பிஹார் மாநிலத்தின் மகள்’’ என்று புகழ்ந்தார்.
பிஹார் மாநிலத்தின் பக்சார் மாவட்டத்துக்கும், கம்லாவுக்கும் உள்ள மூதாதையர் தொடர்பு குறித்து புகழ்ந்து பேசினார். அதேபோல, பிரதமர் மோடியையும் கம்லா பாராட்டி பேசினார். மோடி எழுதிய ‘ஆங்க் ஆ தன்யா சே’ என்ற கவிதை நூலில் இருந்து சில கவிதைகளையும் கூறினார்.
முதல் பெண் பிரதமர்: டிரினிடாட்டின் தென் பகுதியில் உள்ள சிபாரியா என்ற பகுதியில் கடந்த 1952 ஏப்ரல் 4-ம் தேதி பிறந்தவர் கம்லா. இந்த நாட்டின் முதல் அட்டர்னி ஜெனரல், பெண் எதிர்க்கட்சி தலைவர், முதல் பெண் பிரதமர் என்ற பெருமைக்குரியவர். சிறந்த வழக்கறிஞராக, அரசியல் தலைவராக திகழ்பவர். கடந்த 2010 முதல் ஐக்கிய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கிறார். கடந்த 1995-ல் சிபாரியா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார். அதன்பிறகு, கல்வித் துறை அமைச்சர் உட்பட பல்வேறு கேபினட் பதவிகளை வகித்தார்.
இவரது முன்னோர்கள் பிஹார் மாநிலம் பக்சார் மாவட்டத்தில் உள்ள பேலுபூர் கிராமத்தில் வசித்தவர்கள். கடந்த 2012-ல் கம்லா தனது சொந்த கிராமத்துக்கு வந்தார். அப்போது பாரம்பரிய நாட்டுப்புறப் பாடல்கள் பாடி,மலர் மாலை அணிவித்து மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது அவர், ‘‘என் சொந்த வீட்டுக்கு வந்தது போல உணர்கிறேன்’’ என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இந்தியா – டிரினிடாட் உறவை மேம்படுத்துவதில் இவரது பங்களிப்புக்காக, வெளிநாட்டவருக்கு வழங்கும் இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பிரவாசி பாரதிய சம்மான்’ விருதை 2012-ல் அப்போதைய குடியரசு தலைவர் பிரதிபா பாட்டில் வழங்கியது குறிப்பிடத்தக்கது.