அமெரிக்கா: இந்தியா – பாக். போல இஸ்ரேல் – ஈரான் போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 3-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். விரைவாக நல்ல முடிவு எடுத்து இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்த நான் எடுத்த முயற்சிகளை ஏற்றுக்கொண்டு அந்த தலைவர்கள் செயல்பட்டது போல இஸ்ரேல் மற்றும் ஈரான் தலைவர்களும் போர் நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.