சீனா : சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் ஆற்றில் மூழ்கிய உரிமையாளரை காப்பாற்றி உயிரிழந்த வளர்ப்பு குதிரைக்கு அந்நாட்டு அரசு சார்பில் சிலை நிறுவப்படவுள்ளது.
ஹுபெய் மாகாணத்தின் ஸியாந்தாவோ நகரத்தைச் சேர்ந்தவர் யிலிபாய் தோசுன்பேக் (வயது 39) இவர் பைலாங் அல்லது வொயிட் டிராகன் என்றழைக்கப்பட்ட 7 வயதுடைய வெள்ளை நிற குதிரையை வளர்த்து வந்தார்.
இந்நிலையில், கடந்த பிப்.4 அன்று ஸியாந்தாவோவிலுள்ள ஓர் ஆற்றின் கரையில் அவர் தனது குதிரைக்கு பயிற்சியளித்து வந்துள்ளார்.அப்போது, அந்த ஆற்று நீரில் ஓர் நபர் மூழ்கி உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதைப் பார்த்த அவர் சற்றும் தாமதிக்காமல் அவரது குதிரையை ஆற்றினுள் செலுத்தியுள்ளார். சுமார் 40 மீட்டர் தூரத்திற்கு நீந்திச் சென்ற அந்த குதிரையும் அதன் உரிமையாளரும் உயிருக்கு போராடிய அந்த நபரை பிடித்து இழுத்து கரைக்கு கொண்டுவந்து சேர்த்துள்ளனர்.
அதுவரையில், நீருக்குள் நீந்தியப் பழக்கமில்லையென்றாலும் அந்த குதிரை சற்றும் தயங்காமல் சென்று அவரை மீட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, 6 நாள்கள் கழித்து அந்த குதிரைக்கு உடல் நலம் குன்றி, உணவு உண்ண மறுத்துள்ளது. பின்னர், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குதிரைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்துள்ளனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அந்த குதிரை கடந்த பிப்.11 அன்று உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.