அமெரிக்கா: அமெரிக்கா வர்த்தகப்போரில் தீவிரம் காட்டி வரும் நிலையில், அதற்கெதிராக நாடுகளை அணி திரட்ட சீனா முனைப்புடன் களம் இறங்கியுள்ளது. இதனால் உலக நாடுகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த 2ஆம் தேதி சுமார் 75 நாடுகளுக்கு பதில் வரியை விதித்த நிலையில் அதற்கு சீனா மட்டும் எதிர்த்து பதில் வரி போட்டது. இதையடுத்து பிற நாடுகளுக்கு வரி உயர்வை நிறுத்திவைத்த ட்ரம்ப் சீனாவை மட்டும் குறிவைத்து வரிகளை அதிகரித்து வருகிறார்.
ஆனால், இதற்கு பதிலடி தரும் விதமாக தானும் வரிகளை உயர்த்தும் சீனா, இன்னொரு முனையில் அமெரிக்காவிற்கு எதிராக அணி திரட்டும் பணியில் தீவிரமாக உள்ளது.
அண்டை நாடுகள், தென்கிழக்காசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகளுடன் வணிக உறவுகளை மேலும் அதிகரிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவுடனான தங்கள் நடவடிக்கைகளில் இந்தியாவும் கூட்டுச் சேர வேண்டும் என சீன தூதர் வெளிப்படையாகவே தெரிவித்தார். இந்நிலையில் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் முக்கியமான நாடான ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், பெய்ஜிங் சென்று சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தார்.
இதன்பின் பேசிய அவர் ஒருதலைபட்சமான அடாவடிகளை எதிர்க்கும் தங்கள் போராட்டத்திற்கு ஐரோப்பிய யூனியன் துணை நிற்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார். வரி விதிப்பு யுத்தத்தில் யாருக்கும் இறுதி வெற்றி இருக்காது என்பதே வரலாறு என்றும் சீன அதிபர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வியட்நாம், மலேசியா, கம்போடியா ஆகிய 3 தென்கிழக்காசிய நாடுகளுக்கும் சீன அதிபர் செல்கிறார்.
இம்மூன்று நாடுகளும் அமெரிக்காவின் வரி விதிப்பால் மிக அதிகம் பாதிக்கப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றுடன் இரு தரப்பு ஒப்பந்தங்களை செய்து அமெரிக்காவால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க சீனா முற்படும் எனத் தெரிகிறது. இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான எல்லை பிரச்சினையிலும் சீனா மென்மையான போக்கை கடைப்பிடிப்பதும் அமெரிக்காவை எதிர்கொள்வதற்கான அதன் ஒரு வியூகமாக பார்க்கப்படுகிறது.