தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 1 கப்
அவல் – 1 கப்
உப்பு – சுவைக்கேற்ப
சில்லி ப்ளேக்ஸ் – 1 டீஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி – 1 கையளவு (பொடியாக நறுக்கியது)
கேரட் – 1 (துருவியது)
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் – 1 டீஸ்பூன்
எள்ளு – 1/4 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் பச்சரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் அதில் நீரை ஊற்றி 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். அதேப் போல் அவலை எடுத்து, அதையும் நீரில் ஒருமுறை கழுவிவிட்டு, நீரில் 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு ஊற வைத்த பச்சரிசி மற்றும் அவலை மிக்சர் ஜாரில் ஒன்றாக சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, மூடி வைத்து 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அந்த மாவில் சில்லி ப்ளேக்ஸ், இஞ்சி, கொத்தமல்லி, வெங்காயம், கேரட் சேர்த்து தோசை மாவை விட ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு தோசைக்கல்லை அடுபப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், எள்ளு விதைகளை சேர்த்து தாளித்து, பின் அதில் 2 கரண்டி மாவை ஊற்றி லேசாக பரப்பி விட வேண்டும். பின் அதை சிறிது நேரம் மூடி வைத்து மிதமான தீயில் வைத்து முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான அரிசி பன் தோசை தயார்.