பெங்களூர்: ஷூ கொள்ளை கும்பல் கைது… கர்நாடகாவில் வீடுகள் மற்றும் கோவில்களில் கடந்த ஏழு ஆண்டுகளாக விலையுயர்ந்த 10,000 ஷூக்களை கொள்ளையடித்து விற்பனை செய்து வந்த கும்பலை, போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள பெல் குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த இரண்டு ‘காஸ்’ சிலிண்டர்கள் மற்றும் சில விலையுயர்ந்த ஷூக்கள் சமீபத்தில் திருடு போயின. இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார். வீட்டின் அருகே இருந்த, ‘சிசிடிவி’யில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தப்பட்டது.
இதில், கொள்ளையர்கள் ஆட்டோவில் வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அது தொடர்பான விசாரணை முடிவில் கங்காதர், எல்லப்பா ஆகியோரை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.
அவர்கள் வீட்டில் இருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 715 ஜோடி விலையுயர்ந்த ஷூக்களும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் கடந்த ஏழு ஆண்டுகளாக விலையுயர்ந்த ஷூக்களை திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்தது அம்பலமாகியுள்ளது. இதுவரை, 10,000 ஷூக்களை இவர்கள் திருடியதும் தெரியவந்தது.
இரவு நேரத்தில் ஆட்டோவில் நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள கோவில்கள், வீடுகளுக்கு சென்று அங்கிருந்த விலையுயர்ந்த ‘பிராண்டட் ஷூ’க்களை திருடி, அவற்றை தமிழகம், புதுச்சேரி எடுத்துச் சென்று குறைந்த விலையில் விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளது. இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.