பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது மனைவிக்கு மாற்று நிலம் ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் பதவி விலகக் கோரி பாஜக மற்றும் மஜத கட்சியினர் மைசூர் நோக்கி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்
. இதில் மத்திய அமைச்சரும் மஜத தலைவருமான குமாரசாமி நேற்று பங்கேற்றார். அப்போது குமாரசாமி கூறுகையில், “பழங்குடியினர் ஆணையத்தில் ரூ.187 கோடி முறைகேட்டில் முதல்வர் சித்தராமையா ஈடுபட்டுள்ளார். ஆனால் அமைச்சராக இருந்த நாகேந்திரன் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். அரசு அதிகாரிகள் இடமாற்றத்தில் சித்தராமையாவின் மகன் யதீந்திரா நேரடியாக தலையிட்டுள்ளார்.
அதேபோல் மனைவிக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான 14 வீடுகளை ஒதுக்கி ஊழல் செய்தார். சித்தராமையாவைப் போலவே துணை முதல்வர் டி.கே.சிவகுமாரும் ஏராளமான ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். அதன் மூலம் கோடிக்கணக்கில் சொத்து குவித்துள்ளார். ஏழைகளின் நிலத்தை அபகரித்தல், மலைகளை ஆக்கிரமித்தல், சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் கடத்தல், அரசு ஒப்பந்தங்களை உறவினர்களுக்கு வழங்குதல் போன்ற குற்றங்களில் தொடக்கத்தில் இருந்தே டி.கே.சிவக்குமார் ஈடுபட்டுள்ளார். சிவக்குமாரின் சொத்துக் குவிப்பு தொடர்பான ஆவணங்களை சேகரித்து வருகிறேன்,” என்றார்.
இதற்கு துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், “எனது சொத்துக்கள் அனைத்திற்கும் ஆதாரம் உள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் இருந்து விடுதலை பெற்றுள்ளேன். குமாரசாமியின் இதுபோன்ற மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டேன். எங்கே. குமாரசாமியின் ஆட்சியில் நடந்த ஊழல்களை பட்டியலிடுவோமா? அடிப்படையில் அவர் ஒரு மோசடி செய்பவர் என்பதை மக்கள் அறிவார்கள்,” என்றார்.