தஞ்சாவூர், ஜன.14- தஞ்சாவூரில் இயங்கி வரும் உழவர் சந்தையில் சமத்துவ பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
விவசாயிகள் விளைவித்த காய்கறி உள்ளிட்ட பொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் விற்பனை செய்து லாபம் அடைவதற்காக தொடங்கப்பட்டது உழவர் சந்தை. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பாபநாசம், திருக்காட்டுப்பள்ளி என மொத்தம் ஐந்து உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.
தமிழக அரசின் வேளாண் விற்பனை மற்றும் வணிகம் துறையின் கீழ் உழவர்சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை அண்ணா நகரில் செயல்படும் உழவர் சந்தை 1999ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 70க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. 14 டன் காய்கறிகள் விற்பனை நடக்கிறது என்று கூறப்படுகிறது.
இந்த உழவர் சந்தையில் விவசாயிகள் நேரடியாக தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகள், வாழைப்பழம், வாழைக்காய், கிழங்குகள் போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். இந்த உழவர் சந்தையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) சுதா , விற்பனைகுழு செயலாளர் சரசு, வேளாண்மை அலுவலர் ஜெய்ஜி பால் மற்றும் விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொங்கல் பானைகள் வைத்து பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.