தஞ்சாவூர்: பேராவூரணி அருகே களத்தி வயல் கிராமத்தில் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட களத்தூர் ஊராட்சி களத்திவயல் சாலை ரூ.96.38 லட்சம் மதிப்பீட்டிலும், பேராவூரணி பேரூராட்சி காந்தி பூங்கா பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியை சனிக்கிழமையன்று உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
இதேபோல் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் திருவத்தேவன் ஊராட்சியில், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பொது சேவை மையக் கட்டடம், சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சியில், ரூ.31.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம், கொள்ளுக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.51.05 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய இரண்டு வகுப்பறைக் கட்டடம், புதிய கணினி அறை கட்டடம், ஆண்டிக்காடு ஊராட்சியில் ரூ.42.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கிராம செயலக கட்டடம், ரூ.17.50 லட்சம் மதிப்பீட்டில், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட குறிச்சி சுய உதவிக் குழு கூட்டுறவு சங்க கட்டடம் என ரூ.2 கோடியே 58 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், திமுக ஒன்றியச் செயலாளர்கள் க.அன்பழகன், கோ.இளங்கோவன், ஆர்.பன்னீர் செல்வம், வை.ரவிச்சந்திரன், குழ.செ.அருள்நம்பி, எஸ்.ஞானப்பிரகாசம், நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர், பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், துணைத் தலைவர் கி.ரெ.பழனிவேல், பேரூராட்சி கவுன்சிலர்கள், மீனவர் நலவாரிய உறுப்பினர் மல்லிப்பட்டினம் தாஜுதீன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன், நாகேந்திரன், கலியபெருமாள், செல்வேந்திரன், வட்டாரக் கல்வி அலுவலர் ராமமூர்த்தி, கூட்டுறவுத்துறை செயலாட்சியர் ஏ.சரவணக்குமார், பேராவூரணி வட்டார கள அலுவலர் ரமேஷ், கூட்டுறவு சங்கத் தலைவர் லலிதா தியாகராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.