தஞ்சாவூர்: கடந்த 5 ஆண்டு காலம் ஆட்சி செய்த திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் வேலு. கார்த்திகேயனை ஆதரித்து தேரடியில் பிரசாரம் செய்த அவர் மேலும் பேசியது: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை; அவசியம்; அவசரம். ஏழை, நடுத்தர மக்களை ஏமாற்றி துரோகம் செய்த அரசு திமுக அரசு என்பதே அதற்குக் காரணம். கடந்த 5 ஆண்டு காலம் ஆட்சி செய்த திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
இதனால், ஏமாற்றிய அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டுமானால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தமிழகத்தில் மீண்டும் மலர வேண்டும்.
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும் தமிழக அரசும் ஒத்தக் கருத்துடன் செயல்பட வேண்டும். அதன் அடிப்படையில் தமிழகம் வரும் ஆண்டுகளில் சிறந்து வளரும் என்பதிலே மாற்று கருத்து இருக்க முடியாது.
கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் பால் விலை, மின் கட்டணம், குடிநீர் கட்டணம், பத்திரப் பதிவு உயர்வு, குப்பைக்கு கூட வரி என அனைத்தும் உயர்ந்துள்ளது.
கரோனா காலத்தில் அரசுக்கு வரி வருமானம் இல்லாத நிலையிலும் எடப்பாடி பழனிசாமி அரசு மருத்துவர்களையும், செவிலியர்களையும் பணியமர்த்தினார். அரசு ஊழியர்களுக்கு மாத ஊதியத்தை முழுமையாக வழங்கினார். கடினமான காலத்தில் ஏழை மக்களுக்கு உதவுவதற்காக அம்மா உணவகத்தில் 3 வேளையும் இலவசமாக உணவு கொடுத்தார்.
ரேஷன் பொருள்களையும் இலவசமாக கொடுத்து, கரோனா காலத்தில் கூட பொங்கலுக்கு ரூ. 2 ஆயிரத்து 500 வழங்கினார். இதற்கு நேர் மாறாக திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களை வஞ்சிக்கும் வகையில் வரிச் சுமையை ஏற்றியது என்பதை வாக்காளர்கள் மறந்து விடக்கூடாது.
எனவே, இத்தொகுதியில் வாக்காளர்கள் குக்கர் சின்னத்தில் வாக்களித்து திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார் வாசன்.