சென்னை: தமிழ்நாடு பெண் அரசு ஊழியர்களுக்கு புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. என்ன தெரியுங்களா?
தமிழக அரசுப் பணியில் இருக்கும் பெண் ஊழியர்களுக்கு ஒரு மிக முக்கியமான அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இனி இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தாலும், மூன்றாவது பிரசவத்திற்கும் முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களை தலைமைச் செயலாளர் அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பியுள்ளார். தமிழக அரசுப் பணியாளர் விதிகளின்படி, மகப்பேறு விடுப்பு என்பது இதுவரை இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் உதவி பிரிவு அலுவலராகப் பணிபுரியும் திருமதி P. மங்கையர்க்கரசி என்பவர், தனது மூன்றாவது குழந்தைப் பேற்றிற்காக மகப்பேறு விடுப்பு கோரி விண்ணப்பித்திருந்தார்.
ஆனால், இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பதால் அவருக்கு விடுப்பு மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரருக்கு மகப்பேறு விடுப்பு வழங்க உத்தரவிட்டதோடு, இது தொடர்பாக அரசு உரிய திருத்தங்களை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியது.