திருச்சி: 2ம் நாளாக அதிரடி சோதனை… திருச்சி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரபல துணிக்கடைகளில், வரி ஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஏப்ரல் 10, 2026 முதல் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், பல குழுக்களாகப் பிரிந்து திருச்சி சாரதாஸ் உள்ளிட்ட முக்கிய துணிக்கடை கிளைகளில் ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்தச் சோதனை 2-வது நாளாக நீடிக்கிறது.
வருமான வரி ஏய்ப்பு மற்றும் கணக்கில் வராத பணப்பரிவர்த்தனைகள் குறித்த புகார்களின் அடிப்படையில் இந்த அதிரடி சோதனை நடைபெறுகிறது. திருச்சி மட்டுமல்லாது, தமிழகத்தில் 7 ஊர்களில் பிரபல ஜவுளி கடைகளில் ஒரே நேரத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். தஞ்சாவூர், கும்பகோணம், புதுக்கோட்டை, கோயம்புத்தூர், திருப்பூரில், ராமநாதபுரம், கடலூரில் உள்ள ஆனந்தம் சில்க்ஸ் கடைகளிலும், உள்ள திருச்சி சாரதாஸ் துணிக்கடையிலும், சேலத்தில் உள்ள சிவா டெக்ஸ்டைல்ஸ், கடையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் கடைகளை மூடி, உள்ளே இருக்கும் ஊழியர்களை வெளியே அனுமதிக்காமல், கணக்கு புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்தச் சோதனையில் ஆவணங்கள் மற்றும் முக்கிய தகவல்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. திருச்சி சாரதாஸ் கடையில் 2வதுநாளாக ஐடி ரெய்டு நடைபெறுவதால் வாடிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இந்தநிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அரசியல் பிரமுகர்களுக்கு சாரதாஸ் சார்பில் லட்சகணக்கில் நன்கொடை கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.