தஞ்சாவூர்: மக்களின் அமோக ஆதரவில் வெற்றி பெற்று அந்த வெற்றியை தலைவரிடம் சமர்ப்பிப்போம் என தஞ்சை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தஞ்சாவூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் மாநகராட்சி பகுதியில் 4,9 வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடை பயிற்சி மேற்கொண்டோரிடம் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து வாலிபால், ஹாக்கி விளையாட்டு வீரர்களிடம் வாக்கு கேட்டார். காணும் வாலிபால் விளையாடி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்தார். பின்னர் ஆற்றுப்பாலம் திமுக சட்டமன்ற தேர்தல் பணிமனையில் மாற்றுக் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தஞ்சை 26வது வார்டு அ.தி.மு.க செயலாளர் கண்ணன், கீழவாசல் பகுதி சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் ரபீக், 14வது வார்டு பிரதிநிதி அப்துல், 26வது வார்டு பிரதிநிதி மன்சூர் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு தஞ்சை சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் சண்.ராமநாதன் கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், திராவிட மாடல் நல்லாட்சியின் சாதனைகள் உலகெங்கும் பரவி உள்ளது. இந்தியாவிலேயே நம்பர் ஒன் வளர்ச்சியடைந்த மாநிலமாக தமிழ்நாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றி காட்டி உள்ளார். வரும் தேர்தலிலும் கண்டிப்பாக தி.மு.க தான் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் ஆக மு .க. ஸ்டாலின் வருவார் . திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளால் ஈர்க்கப்பட்டு இன்றைய தினம் தஞ்சையில் நூற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் தி.மு.க.வில் இணைந்துள்ளனர்.
இதில் பெரும்பாலானோர் இளைஞர்கள் ஆவர். ஏற்கனவே தினம் தோறும் அ.தி.மு.க உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் தி.மு.க.வில் இணைந்த வண்ணம் உள்ளனர் . இன்னும் மாற்று கட்சிகளை சேர்ந்த பலர் தி.மு.க.வில் இணைய உள்ளனர் . தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தஞ்சை சட்டமன்ற தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அந்த வெற்றியை தலைவரிடம் சமர்ப்பிப்போம் என்றார்.
பின்னர் கரந்தை, கீழ வாசல் பகுதியில் திறந்த ஜீப்பில் ஒவ்வொரு தெருவாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேட்பாளருடன் எம்.பி.முரசொலி, சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான கூட்டணி கட்சியினர் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
பின்னர் மாலை சட்டமன்றத் தேர்தல் பணிமனையிலிருந்து திமுக வேட்பாளர் சண்.ராமநாதன் பிரச்சாரத்தை தொடங்கினார். 47,48,49 ஆகிய வார்டுகளில் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். மங்களபுரம் பகுதியில் வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது வேட்பாளர் சண்.ராமநாதன் பேசுகையில், தமிழ்நாடு மக்களின் நலனில் அதிக அக்கறை கொண்டவர்தான் திராவிட மாடல் ஆட்சி நடத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின். மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செய்து காண்பித்துள்ளார். பிற மாநிலங்களும் நம் திட்டங்களை பார்த்து வியந்து போய் உள்ளனர்.
நம் மாநிலத்தின் வெற்றி திட்டங்களையும் அவர்கள் மாநிலத்திலும் செயல்படுத்துகின்றனர். அதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பை உயர்த்த உணவு பதப்படுத்தலுக்கான திறன் பயிற்சி வழங்கப்படும். உழவர் சந்தைகள்’ வெற்றிகரமாக செயல்படுவது போல், நகர்ப்புற பகுதிகளில், உழவர் அங்காடிகள் அமைக்கப்படும். தஞ்சை மாநகராட்சி பகுதியில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும். தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்று நோய்க்கான நவீன சிகிச்சை வசதி ஏற்படுத்தப்படும். இளைஞர்களுக்காக புதிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்தில் நன வசதிகளுடன் கூடிய புதிய அரசு நெல் அரவை ஆலை அமைக்கப்படும். மாநகராட்சி முழுவதும் முழுமையான பாதாள சாக்கடைத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.