சென்னை: சென்னையில் இளநீர் விலை 80 ரூபாயாக உயர்ந்து விற்பனையாகிறது.
பொள்ளாச்சி இளநீர் மற்றும் கடலூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் இளநீர், சென்னை தேவையை பூர்த்தி செய்கிறது. கோடைகாலம் தொடங்கி விட்டாலே இளநீர் மற்றும் பழச்சாறுகளின் விலை உயர்ந்து விடுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் விலை உயர்வு என்றாலும் இந்த ஆண்டு தேர்தல் காலம் என்பதால் இளநீர் விற்பனை அதிகரித்துள்ளது.
இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இளநீர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ள ஊழியர்கள், பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பழச்சாறு, குளிர்பானங்கள், தர்பூசணி, கிர்ணி பழம், இளநீர் ஆகியவற்றை வாங்கி சூட்டை தணிக்கிறார்கள்.
வெயிலின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க இயற்கை உணவுகளையும் சிலர் எடுக்கிறார்கள். சென்னையில் வீதிக்கு வீதி இயற்கை உணவுகள், பழங்கள், எலுமிச்சம் ஜூஸ், ரஸ்னா, ரோஸ் மில்க் மற்றும் கூழ் வகைகளும் அதிகமாக விற்பனையாகிறது. இதில் இளநீர் விலை மட்டும் அதிகமாக உள்ளது. மற்ற இயற்கை பானங்களை விட இளநீர் விலை கோடை காலத்தில் இரு மடங்காக உயர்ந்து விட்டது.
பொள்ளாச்சி இளநீர் மற்றும் கடலூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் இளநீர், சென்னை தேவையை பூர்த்தி செய்கிறது. பொள்ளாச்சி இளநீர் 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மற்ற இளநீர் 50, 60 ரூபாய்க்கு விற்கிறார்கள். கடந்த மாதம் வரை 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட இளநீர் இப்போது 60, 70 ரூபாய் வரை நிற்கிறார்கள்.
கோடை காலத்தை பயன்படுத்தி இளநீர் உற்பத்தியாளர்கள் விலையை உயர்த்தி விடுகிறார்கள். அதனால் அதிக விலை கொடுத்து வாங்குவதால் கூடுதல் விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுவரையில் இளநீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை, மே மாதத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. கடந்த வருடத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டு இளநீர் விலை 20 ரூபாய் வரை கூடுதலாக விற்கப்படுகிறது.