சென்னை: கருத்துக்கணிப்புகள் என்ற பெயரிலான பொய் தகவல்களை உடைத்தெறிவதோடு, 210 தொகுதிகளில் வெற்றிப்பெற்று தனிப்பெரும்பான்மையுடன், அதிமுக ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக இ.பி.எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருத்துக்கணிப்புகளை கண்டு அதிமுகவினர் மனம் தளர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துக் கணிப்புகள் அப்படியே நடந்ததாக எந்த வரலாறும் கிடையாது என்றும் இ.பி.எஸ் கூறியுள்ளார்.
2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிப்பெறும் என கருத்துக்கணிப்புகள் கூறிய நிலையில், அக்கட்சி வெறும் 23 இடங்களை மட்டுமே பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறவில்லை என்றும் இ.பி.எஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
2016ஆம் ஆண்டு தேர்தலிலும் கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி, மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்ததுதான் வரலாறு என்றும் இ.பி.எஸ் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் தோற்கப்போகிறோம் என்பது ஸ்டாலினுக்கு தெரிந்துவிட்டதாக இ.பி.எஸ் கூறியுள்ளார். எனவே, இப்படியான கருத்துக் கணிப்புகளை திட்டமிட்டு வெளியிடுவதன் பின்னணியில் சூழ்ச்சி இருப்பதற்கு வாய்ப்பு உண்டு என்றும் இ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.
திமுக வெல்லப்போகிறது என்ற மாய பிம்பத்தை உருவாக்கி, வாக்கு எண்ணிக்கையில் தில்லுமுல்லு செய்யவும், குழப்பத்தை உருவாக்கவும் திமுகவினர் முயற்சி செய்வார்கள் என்றும் இ.பி.எஸ் கூறியுள்ளார்.