சென்னை: மத்திய அரசுடன் பேசி, இன்னும் 2 வார காலத்திற்குள் விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் உள்ள 317 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் பிரதிநிதிகள், இன்று (மே 12) தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின் போது, மத்திய அரசிடமிருந்து தமிழக விவசாயிகளுக்கு வந்து சேர வேண்டிய 317 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை விரைந்து பெற்றுத் தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் இந்தத் தொகையினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் முதலமைச்சரிடம் முறையிட்டனர். விவசாயிகளின் கோரிக்கையை மிகுந்த கனிவுடன் கேட்டறிந்த முதலமைச்சர் விஜய், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கத் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட்டார்.
மத்திய அரசுடன் பேசி, இன்னும் 2 வார காலத்திற்குள் அந்த 317 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை விவசாயிகளுக்குப் பெற்றுத் தர வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சரின் இந்தத் துரித நடவடிக்கை, காவிரி டெல்டா உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, விவசாயிகளின் நலனில் முதலமைச்சர் காட்டிய அக்கறை தங்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக, காலக்கெடு நிர்ணயித்துப் பணத்தைப் பெற்றுத் தர உத்தரவிட்டது விவசாயிகளின் நீண்ட நாள் போராட்டத்திற்குச் சீக்கிரம் விடிவுகாலம் பிறக்கும் என்பதைக் காட்டுகிறது.
இந்தப் புதிய அரசின் மக்கள் நலன் சார்ந்த அணுகுமுறை விவசாயச் சங்கங்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது