ராமநாதபுரம்: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு… அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் (அ.ம.மு.க) நிலவி வரும் உட்கட்சிப் பூசல் மற்றும் தேர்தல் தோல்வி எதிரொலியாக, ராமநாதபுரம் மாவட்ட கட்சி அமைப்பு முழுமையாக கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதுகுளத்தூர் பகுதியில் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான முருகன் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்துக்கள் கேட்கப்பட்டு, இறுதியில் மாவட்ட அமைப்பைக் கலைக்கும் அதிரடி முடிவு எடுக்கப்பட்டது. செய்தியாளர்களிடம் பேசிய மாவட்டச் செயலாளர் முருகன் மற்றும் கட்சி வட்டாரங்கள்,நடந்து முடிந்த 2026 சட்டமன்றப் பொதுத்தேர்தலில், அமமுக அங்கம் வகித்த தேசிய ஜனநாயக கூட்டணி படுதோல்வி அடைந்ததே இந்த முடிவுக்கு முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது.
கட்சித் தலைமை எடுத்து வரும் தன்னிச்சையான முடிவுகள், டிடிவி தினகரனின் சமீபத்திய அரசியல் நகர்வுகள் நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்களில் நிலவும் தெளிவற்ற தன்மையால் நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளதாகத் தெரிகிறது. தற்போதைய அரசியல் சூழலில் நிர்வாகிகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டே இந்த “ஏகமனதான” முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தைத் தொடர்ந்து, விருதுநகர் கிழக்கு மற்றும் திருச்சி மாவட்டங்களிலும் அமமுக அமைப்புகள் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசியலில் தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு மற்றும் அதிமுகவின் பிளவு எனப் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வரும் சூழலில், அமமுகவில் ஏற்பட்டுள்ள இந்த அடுத்தடுத்த சரிவுகள் கட்சியின் எதிர்காலத்தைச் சவாலுக்கு உள்ளாக்கியுள்ளன. ராமநாதபுரம் மாவட்ட அ.ம.மு.க.வின் இந்த அதிரடி கலைப்பு நடவடிக்கை, தென் மாவட்ட அரசியல் களத்தில் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.