சென்னை: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் தினசரி மாற்றம் செய்ய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்காசியா போர்ப் பதற்றம் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால், இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
தினமும் 750 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. நஷ்டத்தைச் சமாளிக்க கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டன.
சென்னையில், பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் 14 காசுகளும், டீசல் ஒரு லிட்டர் 3 ரூபாய் 11 காசுகளும் உயர்த்தப்பட்டன. இரண்டாவது முறையாக பெட்ரோல் லிட்டருக்கு 82 காசும், டீசல் 86 காசும் உயர்த்தப்பட்டன.
அதன்படி, பெட்ரோல் ஒரு லிட்டர் 104 ரூபாய் 49 காசுக்கும், டீசல் 96 ரூபாய் 11 காசுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், கச்சா எண்ணெய் போதிய அளவு கையிருப்பில் உள்ளதாகவும், தட்டுப்பாடு ஏற்படாது என்றும் பெட்ரோலியத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, தினமும் விலையை நிர்ணயம் செய்யும் முறையை மீண்டும் அமல்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இந்த நடைமுறை 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொண்டுவரப்பட்டது. ஆனால், 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பெட்ரோல், மற்றும் டீசல் விலை லிட்டருக்குத் தலா 2 ரூபாய் குறைக்கப்பட்ட பிறகு, தினசரி விலை நிர்ணய முறை நிறுத்தப்பட்டது.