பெங்களூரு: பெங்களூரு வந்த உகாண்டா பெண்ணுக்கு எபோலா வைரஸ் பாதிப்பு இல்லை என கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக அறிகுறிகள் இருந்ததால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு ரத்த பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், முடிவில் தொற்று இல்லை என தெரியவந்தது.
உகாண்டாவில் இருந்து பெங்களூருக்கு வந்த பெண்ணுக்கு, எபோலா வைரஸ் நோய் பாதிப்பு இல்லை,” என, கர்நாடக சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
காங்கோ, உகாண்டா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளில், ‘எபோலா’ உயிர்கொல்லி வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மற்ற நாடுகளுக்கும் பரவ வாய்ப்பு இருப்பதால், எச்சரிக்கையுடன் இருக்கும்படி, உலக சுகாதார நிறுவனம், பிற நாடுகளை எச்சரித்து உள்ளது.
இந்நிலையில், உகாண்டாவின் கம்பாலா நகரில் இருந்து, நாகிரி லத்தீப்பா, 28, என்ற பெண், கடந்த 23ம் தேதி, பெங்களூரு வந்தார். அங்கு தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த அவருக்கு, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
எபோலா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்படுவதாக அவர் கூறியதால், அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரின் ரத்த மாதிரி ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் நேற்று கூறுகையில், ”எபோலா தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட பெண்ணுக்கு, ஆய்வக பரிசோதனையில், தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது,” என்றார்.