வியட்நாம்: பிரதமர் மோடி பாராட்டு… வியட்நாமின் டா நாங்கில் நடைபெற்ற 2026 U23 ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய மல்யுத்த வீரர்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளனர். இந்த வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆண்கள் ஃப்ரீஸ்டைல் மற்றும் பெண்கள் மல்யுத்த அணிகள் குழு சாம்பியன் பட்டங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தன. இந்த தொடரில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பதக்கங்களை வென்றுள்ளது.
ஆண்கள் ஃப்ரீஸ்டைல் அணி 4 தங்கம் உட்பட 9 பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்தது. பெண்கள் அணி 6 தங்கம் உட்பட 10 பதக்கங்களை கைப்பற்றியது.
கிரேக்கோ-ரோமன் அணி 8 பதக்கங்களை வென்று தனது வரலாற்றிலேயே அதிகபட்ச பதக்க எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, “நமது மல்யுத்த வீரர்களின் சிறப்பான செயல்பாடு பெருமை அளிக்கிறது. எதிர்கால போட்டிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மொத்தமாக இந்திய அணி 11 தங்கம், 7 வெள்ளி, 9 வெண்கலம் என 27 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.